Pages

Sunday, October 12, 2014

அன்பிற்கான ஒரு பரப்புரை

கோபம்,  வெறுப்பு,  தாகம்  இப்படிப்பட்ட  உணர்ச்சிகளைப்போல  அன்பு  என்பது  இன்னொரு  உணர்ச்சியாக  எனக்குத்  தோணல,,,,,,,
ஒரு  அன்பின்  ஆழம்  நீளம்  அகலம்   இங்கே,,,,,








அன்பை
நிறையப்  பார்த்துவிட்டோம்  இல்லையா
ஆழமற்ற  அன்பு
சற்று  நேரத்திற்கே  நீடித்திருக்கு  அன்பு
கொடுக்கல்  வாங்கல்களுக்கு  மட்டுமான  அன்பு
வேறு  ஏதோ  ஒன்றிற்கான  அன்பு
மறைத்துக்கொள்ளப்படும்  ஒரு கண்ணீரின்  அன்பு
ஒரு கணத்திற்குமேல் நிற்கமுடியாமல் பின்னகர்ந்துவிடும் அன்பு
சட்டென  உதறி  எழுந்துகொள்ளும்  அன்பு
வேறு  ஏதோ ஒன்று நினைவுக்கு வந்துவிடும் அன்பு
ஓங்கிய கத்தியை தயக்கத்துடன் மடித்துவைக்கும் அன்பு
தனக்காக பிறரிடம்  காட்டும்  அன்பு
கை குலுக்கும்போது மட்டும் காட்டும் அன்பு
மனதை மாற்றிக்கொண்டு  திரும்பிப்போகும் ஒரு கள்வனின்  அன்பு
குற்ற  உணர்விலிருந்து  பிறக்கும்  அன்பு
பழக்கத்தின்  பொருட்டு  தோன்றும் அன்பு
அன்பு  என்றே  தெரியாத  அன்பு
காட்டத்  தெரியாத  அன்பு
ஏற்கப்படாத  அன்பு
மிருகங்களிடம்  காட்டும் அன்பு
மிருகம்  காட்டும் அன்பு
மிருகத்தனமான  அன்பு
கடவுள்கள்  மனிதர்களிடம்  காட்டும்  அன்பு
மனிதர்கள்  கடவுளிடம்  காட்டும்  அன்பு
இலட்சக்கணகானோருக்கு  கையசைக்கும்  ஒரு தலைவனின்  அன்பு
ஒரு ரோகி  இன்னொரு ரோகிக்கு  காட்டும் அன்பு
ஆரோக்கியமானவர்கள்  ஆரோக்கியமற்றவர்களிடம்  காட்டும்  அன்பு
ஒரு ரூபாய்  நாணயத்தை  சுண்டியெரியும்  அன்பு
ஸூவிற்கு  பாலீஸ்போடும்  சிறுவனின்  தலையை  உற்று கவனிக்கும்போது  தோன்றும்  கணநேர  அன்பு
வெறுப்பை  மறைத்துக்கொள்வதற்காக காட்டும் அன்பு
வேங்கை  ஒரு மானை  வேட்டையாடும்போது  புதரில்  மறைந்திருக்கும்  குட்டியின்  கண்களில் ததும்பும் அன்பு
ஒரு பெண்ணை அடையும்போது  கனியும் அன்பு
ஒரு  பெண்ணை  இழக்கும்போது  பெருகும் அன்பு
ஒரு கிளியின்  சிறகுகளைக்  கத்தரிக்கும் அன்பு
தண்டிப்பதற்கும்  மன்னிப்பதற்கும்  பயன்படும் அன்பு
ஒருவரை  போகவிடாமல்  தடுக்கும்  அன்பு
பத்து  எறும்புகளை  நசுக்கிக்  கொன்றுவிட்டு
ஒரு  எறும்பை தப்பிப்போகவிடுவதன்  அன்பு
துப்பாக்கியில்  ஒரு புல்லட்டை மிச்சம் வைக்கும் அன்பு
ஒரு நடிகனிடம்  அவனது  கதாபாத்திரத்திற்காக  காட்டும் அன்பு
ஒரு கவிஞனிடம் அவனது  சொற்களுக்காக காட்டும் அன்பு
ஒரு  வேசியிடம்  அவளது முத்தத்திற்காக காட்டும் அன்பு
சுருக்குக் கயிறை  கழுத்தில் மாட்டிக்கொள்ளூம்போது
அந்தக்  கயிறின் மேல் காட்டும்  அன்பு
குழந்தைகளீடம்  அவர்கள் நம்  குழந்தைகள்
என்பதற்காக  மட்டும் காட்டும்  அன்பு
நினைக்க விரும்புகிற  அன்பு
மறக்க  விரும்புகிற  அன்பு
காரல் மார்க்ஸ் மனிதகுல  விடுதலைக்குக் காட்டிய அன்பு
ஹிட்லர்  ஜெர்மானியர்களின் நன்மைக்காகக் காட்டிய அன்பு
துயருறும்  ஒரு கன்றைக்  கொன்றுவிடும்படி  கேட்ட காந்தியின்  அன்பு
ஒரு  ஆசிரியை  தன்  மாணவர்களுக்கு  காட்டும்  அன்பு
ஒரு கழைக்கூத்தாடி கயிற்றில் நடக்கும்  தன்  குழந்தைக்கு காட்டும்  அன்பு
ரொக்கமாக  தரப்படும்  அன்பு
வங்கிக் கணக்கில்  செலுத்தப்படும்  அன்பு
காசோலையாக  தரப்படும்  அன்பு
பரிசுப்பொருள்களாக  தரப்படும்  அன்பு
நிறைய  அன்பைப்  பார்த்துவிட்டோம்
ஆனாலும்  அன்பிற்கான  பரப்புரைகளை
நம்மால்  நிறுத்த  முடியவில்லை
ஒவ்வொரு  அன்பிற்கு  பின்னேயும்
மனமுடைந்து  போக
ஏதோ  ஒன்று  இல்லாமல்  போவதே இல்லை
மனுஷ்யுபுத்திரன்    11.10.2011
 · 

5 comments:

  1. அம்மா,
    நெடுநாள் கழித்து ஒரு அட்டகாசமான கவிதை பகிர்வோடு உங்கள் தளம் வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் மனுசியபுத்திரனின் கவிதை. அந்த அன்பு மழையில் நனைந்துகொண்டே இருக்கிறேன் நான்:)

    ReplyDelete
    Replies
    1. நன்றிடா மகளே. நீ கற்றுத்தருவாய் என்ற தைரியம்தான். அம்மாவும் மகளும் ஒரே ரசனைவாதி!!

      Delete
  2. வணக்கம்
    அன்பு பற்றி மிக அருமையாக சொல்லியுளீர்கள்... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்
      நன்றி, என்னை ஊக்கப்படுத்துவதற்கு நன்றிகள். ஆலோசணைகள் வழங்குங்கள்.

      Delete
  3. அம்மா எத்தனை அன்புகளசரவைக்கிறது தங்களினன்பும்தான்

    ReplyDelete