Pages

Friday, November 28, 2014

நான் சாரதி

  என்  வாகனத்தின்
  ஒரு  கதவைத்  திறந்து
  உன்னை  வரவேற்கையில்
  உயிருள்ளவளாகவும்....
  அதே  கதவைத் திறந்து
  உன்னை  வழியனுப்புகையில்
  உயிரற்றவளாகவும்......
   நான்...உன் சாரதி !

  கடவுள்கள்  இல்லாத  உலகில்
  சாரதி  நான் தான்  உன்னை
  மோட்சத்திற்கும்  நரகத்திற்கும்
  இட்டுச்  செல்ல  வேண்டும்..
  ஆனால்
  வெறுமனே  நிற்கிறேன்
  நான்....உன்சாரதி !

Thursday, November 27, 2014

சாதல் கூட இனியது !

  சாதலின்  இன்னாதது  இல்லை  இனிததூஉம்
  ஈதல்  இயையாக்  கடை.---    ஈகை   அதிகாரத்தின்  இறுதி.....
         
          துன்பத்தின்  உச்சம்  இறந்துபோவதுதான்.  இன்பத்தின்  உச்சம்  வாழ்ந்துவிடுவதுதான்.    வறுமையோடு  வாழ்கிறவனுக்கும்  வாழ்ந்துவிட  வேண்டும்  என்கிற எண்ணம்  இருக்கும்.  நோயோடு  வாழ்கிறவனுக்கும்  வாழ்ந்துவிட வேண்டும்  என்கிற  எண்ணம்தான்  இருக்கும்.

              சாதலின்  இன்னாதது  இல்லை  என்று  வள்ளுவன்  சொல்லி இருப்பது  மெய்தான்.  ஆனால்  சாதலும்கூட   ஒரு கட்டத்தில்  இனிமையானது,  எப்ப தெரியுமா?   ஈதல்  இயையாக் கடை !

         பிறருக்கு  நம்மால்  எதையும்  கொடுக்க  முடியாத நிலை  வரும்போது  அந்த  நிலையில்  நாம்  இறந்து போவதுகூட  இனிமையானதுதான்.

       இதெல்லாம்  நீங்கள்  அறிந்ததுதான்....என்னுடைய  வேண்டுதல்  என்னவென்றால்,  ஈகை, ஈதல்  என்பதை  தயவுசெய்து  பொருளோடு  மட்டும்  பொருத்திப் பார்க்க வேண்டாம்.  இருக்கிறவன்  இல்லாதவனுக்குக்  கொடுக்க  வேண்டும்  என்பதே  ஈகை.  நாமெல்லாம்  அன்பு, பண்பு,  பாசம், நேசம்.நேரம்.புன்னகை, வார்த்தைகள்...இதெல்லாம் இருக்கிறவர்கள்.  கொடுக்கலாமே !  ப்ளீஸ்....

          பிறருக்காக  நேரத்தைக் கொடுங்கள்,  அன்பைக் கொடுங்கள்.  நல்ல வார்த்தைகளைக் கொடுங்கள்.....ஈகைதான்.  மீண்டும் குறளைப் படியுங்கள்.  நன்றிகளுடன்   இரா. ஜெயா.

    

Sunday, November 23, 2014

இரண்டாவது பிறப்பு

என்  முதல் பிறப்பு  என் பெற்றோர்  மூலம்.  என்  இரண்டாவது  பிறப்பு  உங்கள் மூலம்.......
                      கனவில் வந்த காந்திக்கு  பதில் சொல்லவேண்டும்  என்று  நிலவன் அண்ணா சொன்னபோது  , எனக்கு  கேள்விக் கேட்க மட்டுந்தான்  தெரியும் என்று சொன்னேன்.  ஆனாலும்  என்னிடம்  ஒப்படைக்கும்  பணியை மிகச்சரியாக செய்துவிட  வேண்டும்  என்பதுதான்  என் இயல்பு. அந்த வகையில்  நாளை  பதில் எழுதிவிடுகிறேன்   என்று  அண்ணாவிடம் சொல்லிவிட்டேன்.
                     
                                அலுவலகத்தில்  தற்போது  25% இடஒதுக்கீட்டிற்கு  பணம் பெறுவதற்கான படிவங்கள்  சரிபார்க்கும் மிகப்பெரிய பணி.   நிறைய  பள்ளிகளைப்  பார்க்கலாம்,ஆசிரியர்களையும்,  மாணவர்களையும்  சந்தித்துக்  கொண்டாடலாம்  என்று  இந்த பதவிக்கு வந்த எனக்கு படிவங்களோடும்  புள்ளிவிபரங்களோடும்........மகிழ்வான மனநிலை இல்லை. 

                   அண்ணாவிடமிருந்து  இன்று  பதிலை  எதிர்பார்க்கிறேன்  என்ற செய்தி  வந்தவுடன்  இரவு பத்து மணிக்குமேல்  உட்கார்ந்து  கேள்விகளைப் படித்தேன்.  படிக்கும்போதே  ஒவ்வொரு கேள்விக்கும்  என்மனதில்  பதில் ஓடும்.அதுதான் இறுதியானது.  (  புடவை எடுக்கும்போதும்  இப்புடிதான்.  முதலில்  பார்த்த புடவைதான்  தேர்வு செய்யப்படும்.  ஆனாலும்  இருபது புடவையாவது  பார்ப்பேன்....ரசனையுள்ளவள்!  )  இருந்தாலும்  மற்றவர்கள்  எப்படி  பதிலளித்திருக்கிறார்கள்  என்று பார்த்தேன்.  ...

         கரந்தை சார், ஜம்புலிங்கம் சார், நிலவன்  அண்ணா  இவர்கள் பதிலைப் படித்ததும் .....அய்யய்யோ.....நமக்கு  இப்புடியெல்லா  பதில்  எழுதத்தெரியாதே....( ஒரு கேள்விக்குமட்டும்  அண்ணாவுடன்  ஒத்துப்போனேன் )  ரொம்ப  கவலைப்பட்டேன்.  எப்படியும்  என் மகள்  மைதிலி  மட்டுமாவது  படிப்பாள்  என்று தான்  பதில்  எழுதினேன்.

         காலையில்  பயந்துபோய்  வலைப்பக்கம் வந்த எனக்கு  ...அடடா ....நமக்குத்தானா  இவ்வளவும் !கில்லர்ஜி சகோ,  தமிழ் இளங்கோ சார்,கரந்தை சார்,முனைவர் ஜம்புலிங்கம் சார்,திண்டுக்கல் தனபாலன்  சார்,  என் மகள் மைதிலி...........எப்புடி இப்புடி எல்லாரும் ?  சத்தியமா  கால்கள்  தரையில்  இல்லவேயில்லை.  மிகச்சிறந்த  இலக்கியவாதிகளைக் கொண்ட  இந்த வலைப்பக்கத்தில்  என்  யதார்த்தமான  பதில்கள்  எடுபடாது என்று நினைத்த  எனக்கு  ,நீங்கள் அனைவருமே நல்ல ரசனையாளர்கள்  .............நன்றிகள்

      நிலவன்  அண்ணாவிற்கு  நன்றி  சொல்ல  அழைத்தபோது  ,அவரது  வலைப்பக்கத்தைப்  பார்க்கச்சொன்னார்.  போய்ப்பார்த்தால்......அடடா...எனக்கென்று தனியாக ஒரு பதிவு.நான் விரும்பிய செடிக்கொடிப்பூ  படத்துடன். கூடவே  எனக்கு மிகுந்த  அங்கீகாரமும்.  எல்லோரும்  பார்க்கவும், படிக்கவும்  வேண்டும் என்பதற்காக  நீங்கள்  எடுத்துக்கொண்ட  முயற்சி....நன்றி அண்ணா .இது  என்   இரண்டாவது பிறப்பு !

          நான்  ஊக்கப்படுத்த  வேண்டிய  படிப்பாளி,  படைப்பாளியாக  மாறவேண்டும்,  மற்றவர்கள்  அறிய  வேண்டும்...ஏன் இப்படி  ஒரு ஆசை அண்ணாவுக்கு ?  யோசிக்கிறேன்....ஆசை  என்று  நீங்கள்  சொன்னதால்  நான்  மூன்றாவது  பிறப்புக்கும்  தயாராகிறேன்.  (மூன்று பிறப்பு  இருக்கலாம்.பிறப்பு  என்பது  வளர்ச்சிதானே!)  அது  என்னை  நானே  பிரசவித்துக்  கொள்வதாக இருக்க வேண்டும். அதற்கு  நிறைய சிந்திக்கணும்,ஆழ்ந்து  உள்வாங்கணும். முக்கியமா  பொறுத்திருக்கணும்.  
                              
                  வைரமுத்து, இறையன்பு, எஸ்.ராமகிருஸ்ணன்,  சுப வீரபாண்டியன், மனுஸ்யபுத்திரன்   இப்புடி  இவர்களையே  படிப்பதால்  இவர்களோடே  இருந்துவிடுகிறேன்  அண்ணா.  இருக்கத்தான்  வேண்டும்!  ஆனால்  ஜெயாவாக  வெளியே வர வேண்டுமல்லவா?  இப்போதைக்கு  இயலாது. தொடர்ந்து  என்னை செதுக்க வேண்டுகிறேன்.  உளமார்ந்த  நன்றிகள்  நிலவன்  அண்ணாவிற்கு.
      
     

Monday, November 17, 2014

கனவில் வந்த காந்தி---7

1. நீ மறுபிறவியில்  எங்கு  பிறக்க வேண்டுமென்று  நினைக்கிறாய்?
   
    இந்த  இடத்திலேயே  பிறக்க வேண்டும்.  இந்த பிறவியில்  சிறுவயதிலேயே  அம்மா, அப்பா  இல்லாமல் போன  அனாதை நிலை மட்டும்  வேண்டாம்.

2. ஒருவேளை  நீ இந்தியாவின்  ஆட்சியாளனாக  வந்துவிட்டால்?
 
      அவரப் போல, இவரப்போல..எல்லாம் இல்லாமல்  நான்  நானாயிருந்து,  எனக்கு  என்னென்ன  சிறப்புன்னு  தோணுதோ  அத சிறப்பா செய்வேன்!!!

3.இதற்கு வெளிநாட்டில்  வாழும் இந்தியர்கள்  எதிப்பு தெரிவித்தால் என்ன செய்வாய்?

     நாட்டை விட்டுப்  போனவங்களப்பத்தி  எனக்கு  கவலையில்லை.  பக்கத்தில  இருக்கிறவங்களோட  பார்வைதான்  முக்கியம்.

4.முதியோர்களுக்கு  என்று  ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?

    முதுமையும்  ஒரு காலகட்டம்தானே... ஒதுக்கப்படுறத  நா விரும்பல.  அவுங்க  அனுபவங்கள  சந்தோஷமாக்  கொண்டாடுவேன்.

5.அரசியல்வாதிகளுக்கென்று  புதிய திட்டம் ஏதாவது?

   நாட்டை ஆளப்போறவங்களுக்கு  ஒரு தகுதித் தேர்வு  வச்சா என்ன!!!
பூ அழகாயிருக்கு....முத்துநிலவன்  அண்ணா அழகாயிருக்குன்னு  சொல்லிப்புட்டாரேன்னு  நா  மாத்தி சொல்லமுடியாது.  அப்புடித்தா இந்த பதில்.
6.  மதிப்பெண்  தவறென,  மேல்நீதி  மன்றங்களுக்குப்  போனால்?

   போகட்டும்...தப்பில்லையே..உரிமை  இருக்குல்ல....

7.விஞ்ஞானிகளுக்கென்று   ஏதும்  இருக்கிறதா?

   சரியான  அங்கீகாரம்  வழங்கனும்.  முக்கியமா  சாதி,இன வேறுபாடு  பாக்கக்கூடாது. திறமையைப்  பாக்கணும்.  அத விட்டுப்புட்டு  அந்த விஞ்ஞானி அமெரிக்க  குடிவாழ்  இந்தியர்..........கேட்டாலே புடிக்கல.

8.இதை  உங்களுக்குப்பிறகு  ஆட்சியாளர்கள்  செய்வார்களா?

   எனக்கு  கவலையில்லை.  ஆனால்,  என் பாதை சரியானது.  அதில பின்னாடி  வர்றவங்களும்  அழகா  நடந்து போவாங்கங்கிற நம்பிக்கை  இருக்கு.

9.மற்ற நாடுகளில்  இல்லாத  ஏதாவது புதுமையாக?

    கட்டாயமா  நம்ம  கலாச்சாரம்தான்.    இப்ப சீரழிந்து வருது.   மீண்டும்  பழையபடி  நம்ம  பண்பாடு மாறாம்  இருக்கணும்.  அவ்வளவுதான்.

10.மானிடப்பிறவி  தவிர  வேறு என்ன பிறவி  வேண்டுமென  இறைவன்  கேட்டால்?

  செடி கொடிகளாக......படர்ந்திட  ஆசை.  
தாவரங்கள்  நல்லவை;  சண்டையிடாதவை;  மனதுக்கு நெருக்கமானவை; மெளனத்தால்  சிரிப்பவை;  எப்போதோ  ஊற்றிய  நீருக்கு  இலைகளால்--பூக்களால்--கனிகளால்  நன்றி சொல்பவை; இன்பத்தில் மகிழாதவை; துன்பத்தில்  துவளாதவை;  பல நேரங்களில்  மனிதர்களை விடத்  தாவரங்கள் நல்லவை......எப்புடி என்  ஆசை?

கேள்விகள்  அந்த  நேரத்தின்  எதார்த்தங்கள்..என் பதில்களும்  அப்படியே..
முத்துநிலவன்   அண்ணாவுக்கு  நன்றிகள்.